ABOUT
பாடும் பறவைகள் உருவான கதை
************************************
பஞ்சபூதங்கள் கலைமன்றத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களின் சந்திப்புகளில் வழமையாக சுவையான உணவும், சுகமான உரையாடல்களும் இடம்பெறும். இவையெல்லாம் ஒருவாறு முடிவுக்கு வந்ததும் ஆனந்தமான ஒரு தருணம் உருவாகும். பாடும் ஆற்றலுள்ளவர்கள் ஒவ்வொருவராக பாடத் தொடங்குவார்கள். மேசையிலோ, நாற்காலியிலோ, அல்லது கையில் கிடைக்கும் பாத்திரங்களிலோ தட்டி சிலர் தாளவொலி எழுப்புவார்கள். சிலர் வாயால் தாளவொலியோ, வாத்தியவொலியோ கூட எழுப்புவார்கள். திரையிசைப் பாடல்களை ஒலிக்கவிட்டு பின்னணியிசை வரும் இடங்களில் ஒலியைக் கூட்டியும், பாடகர்களின் குரல் வரும்போது அவர்களின் குரலொலியைக் குறைத்தும், அந்த இடங்களில் நாங்கள் பாடுவோம். இந்த தொழில்நுட்பத்தில் எங்களில் விக்னேஷ், சத்தியவான், மணிவண்ணன் போன்றவர்கள் மிகுந்த திறமைசாலிகள். இப்படியான சந்திப்புக்களுக்கு வசதியான இடங்களை ரூபன் ஒழுங்கு செய்வார்.
சில சந்திப்புகளில் முன்னதாகவே அது எந்த விடயம் சார்ந்ததாக அமைய வேண்டும் என்று ஒரு வரையறை செய்துகொள்வோம். உதாரணமாக அது 80 களில் வந்த திரைப்படப்பாடல்கள் அல்லது ஈழத்து திரைப்படப்பாடல்கள் பற்றியதாக மட்டுமே அமையும். சம்பந்தபட்ட தலைப்பிலேயே பாடல்களும், பேச்சுக்களும் அன்றைய மாலைச்சந்திப்புகளில் இடம்பெறும். ஆனந்தம் கரைபுரண்டு ஓடும். இவர்களில் சிலரின் பாடும் ஆற்றல் கண்டு நாங்கள் வியந்தோம். எல்லாவற்றையும் உச்சம் தொடுவதுபோல் ரஞ்சனின் வரவு அமைந்தது. அவர் இசை விசைப்பலகை (Musical Keyboard) பயிற்சியுள்ளவர் என்பதால் தன் இசைக்கருவியை எடுத்துவந்து வாசிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து கரோக்கி (Karaoke) என அழைக்கப்படும் இசையில் ஆர்வமானோம். இசையமைப்பாளர்களால் பாடகர்களின் தனித்துவமான சுருதிக்கேற்ப, பாடல்வரிகளுக்கேற்ப, தாளக்கட்டோடு அமைக்கப்பட்ட இசைக்கோர்வைக்கு நாங்கள் பயிற்சி எடுக்கத் தொடங்கினோம். அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நாங்கள் ஒரு இசைக்குழுவை தொடங்கலாமே என்ற எண்ணம் எழுந்தது. சுவீடன்வாழ் தமிழர்களின் சமுதாய வளர்ச்சிக்கும், பொழுதுபோக்குக்கும் அது ஒரு தேவை என்றுணர்ந்தோம். எல்லோரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்கள்.
தரமான இசைநிகழ்ச்சி ஒன்றை மேடையேற்ற தேவையான அடிப்படை ஒலிசாதனங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை ரஞ்சனும், மணிவண்ணனும் உருவாக்கினார்கள். அவற்றை வாங்குவதற்கு ஏறத்தாழ 35 000 குரோனர்கள் தேவைப்பட்டது. என்னுடைய சொந்தக் கடனட்டையில் அவற்றை வாங்கினோம். அதைக் கேள்விப்பட்ட பஞ்சபூதங்கள் கலைமன்றத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களான தர்சன், பாலஸ்ரீதரன், பாலா உட்படப் பலரும், நண்பர் இளங்கோவும் தாமாகவே முன்வந்து கடன் வழங்கி என் கடன்சுமையைக் குறைத்தார்கள். இளங்கோவும் இசைக்குழுவில் இணைந்து கொண்டார். இசைக்குழுவிற்கு பாடும் பறவைகள் என்று பெயர் சூட்டினோம். எங்கள் குழுவில் பெண்பாடகிகளாக பூமா, உஷா, சுஜீவா ஆகியோர் இணைந்து கொண்டார்கள். அதைத் தொடர்ந்து தினேஸின் வரவால் பாடகர்களின் தரம் வேறு ஒரு உயரத்தை எட்டியது. ஏனையவர்களின் தரத்தை உயர்த்த தினேஸின் ஆலோசனைகள் உதவின.
இந்த இசைக்குழு உருவானதில் பஞ்சபூதங்கள் கலைமன்றத்தின் பங்களிப்பு அளப்பரியது. தன் குடும்ப விழா ஒன்றில் முதல் மேடைநிகழ்ச்சிக்கு எங்களை அழைத்தவர் நண்பர் பாலா. அதைத் தொடர்ந்து நண்பர் வசி எங்களைத் தங்கள் குடும்ப விழா ஒன்றுக்கு அழைத்து ஒரு தொகை காசும், இசைக்கருவிகள் சிலவற்றையும் (Drum Set etc) பரிசாகத் தந்தார். அன்றிலிருந்து எங்கள் வளர்ச்சி ஏறுமுகமாகவே அமைந்திருக்கிறது. தற்போது புதிய, திறமையான இளம் பாடகர்கள், பாடகிகள் இணைந்து பாடும் பறவைகள் இசைக்குழுவை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்கிறார்கள். மேன்மேலும் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும், ஒன்றாக இணைந்து செயற்படக்கூடிய அங்கத்தவர்கள் இருப்பதும் எங்கள் இசைக்குழுவின் பலமாகக் கருதுகிறேன்.
ஒருங்கிணைப்பாளர்
கோ.ஜெகன்மோகன்